கரூர்:ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் பாண்டியன் என்பவர் கடந்த மார்ச் 13ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு 105 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்த காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று (மார்ச்.19) காலை சுமார் 11.00 மணியளவில் கரூர் நகர காவல் ஆய்வாளர் மிதுன்குமார் தலைமையில் 5 ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அமராவதி ஆற்றுப்படுகையில் கையில் பையுடன் வந்து கொண்டிருந்த நபர், போலீசாரை கண்டதும் முட்புதர்களில் ஓடி மறைந்துள்ளார். அவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(34) என்று தெரியவந்தது.மேலும், அவரது பையில் திருட்டு நகைகள் இருந்தது தெரியவந்தது.
அந்த நகைகள் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் திருடிய நகைகள் என்றும், மேலும் கடந்த மார்ச் 14ஆம் தேதி கரூர் - ஈரோடு சாலையில் உள்ள சோழன் நகரில் உள்ள வீட்டில் திருடிய நகைகள் என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அவரிடம் இருந்த 105 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும், அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அந்த நபர், பல மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கரூர் நகர காவல் நிலையத்தில் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒட்டியாணம், ஆரம், தோடு உள்ளிட்ட 105 புவுன் நகைகள் பத்திரிகையாளர்கள் முன் காண்பிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், நகைகளை திருடிய பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருட்டு சம்பவம் நடைபெற்று ஏழு நாட்களுக்குள் குற்றவாளியை கண்டுபிடித்த கரூர் நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்தார்.