கரூர் நகரிலுள்ள ஹோட்டலில் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி இன்று ஈடிவி பாரத் செய்திக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், ''மணிப்பூர் கலவரத்தை அம்மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இதற்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசும் துணையாக இருந்துள்ளது.
மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தை மக்கள் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதனைக் கண்டித்து சேலம், திருவள்ளூர், மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மணிப்பூர் கலவரம் பின்புலத்தில் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு வழிகாட்டுதலில் நடைபெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி, ஆட்சியைப் பிடிக்க கலவரங்களைத் தூண்டி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் வெள்ளாளக்கொல்லை பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ரவி என்பவர், திட்டமிட்டு சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு, இதுவரை தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சமூகநீதிக்காக போராடி வருவதாக கூறும், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், வெள்ளாளக்கொல்லை பகுதியில் நடைபெற்ற படுகொலை சம்பவத்திற்கு, இதுவரை கொலை வழக்காகக் கூட பதிவு செய்யாமல், குற்றவாளிகளுக்கு துணை போகும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
இதற்குக் காரணமான மணல் மாஃபியா கரிகாலனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தமிழ்நாடு அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறை சென்ற திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவுக்கு, ஆதரவு திமுக தரவில்லை. அவரே சிறையில் இருந்த படி, நீதிமன்றத்தில் தானாக வாதாடி, தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால், கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்சாதி இந்து என்பதால், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த போதும் அமைச்சர் பதவியைப் பறிக்காமல், திமுக நேரடியாக ஆதரவளித்து வருகிறது.