கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆண்டியப்பன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,’பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. இந்த பள்ளி 2000ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகளில் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
2010ஆம் ஆண்டு பள்ளியில் கூடுதல் கட்டடத்திற்கான இடம் தேவைப்பட்டது. நானும் என்னுடைய கிராமத்தைச் சேர்ந்த சிலரும் பள்ளிக்கான கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக ஒரு ஏக்கர் 85 சென்ட் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்குவதாக தலைமையாசிரியரிடம் தெரிவித்தோம். கட்டடம் கட்டுவதற்காக சுமார் 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கவில்லை. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை தொடங்கக் கோரி மனு அளித்தோம். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களது பகுதியில் கூடுதல் பள்ளி கட்டடத்தை கட்ட விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது.