கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிக்கு குலதெய்வக் கோயிலாக பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் தெத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெருமாவலசு, வேலன் செட்டியூர் என அரவக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் ஐந்து தலைமுறையாக தை மாத திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், தெத்துப்பட்டி கிராம மக்கள் ஐந்து தலைமுறையாக பயன்படுத்தி வரும் பெருமாள் கோயிலை இடித்து சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2009ஆம் ஆண்டு தனியாருக்குச் சொந்தமான சுங்கச் சாவடி அமைக்க அந்நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இடிக்கப்பட்ட கோயிலை கட்டித் தராமல் தனியார் சுங்கசாவடி நிர்வாகமும், கரூர் மாவட்ட நிர்வாகமும் காலதாமத படுத்தியதால் அக்கோயிலுக்கு சொந்தமான பொதுமக்கள் சார்பாக கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தலித் விடுதலை இயக்கத்தின் மாநில துணைப் துணைத் தலைவர் தலித் ராஜகோபால் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, தனியார் நிறுவனமானது, சம்பந்தப்பட்ட கோயில் நிலத்துக்கு அருகே உள்ள நிலத்தை வேறு ஒரு தனிநபருக்கு விற்று, ஆக்கிரமிப்பு மேற்கொள்ளும் பணியை தொடங்கினர். எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இன்று (டிச.28) கோயில் இருந்த நிலத்தில் வழிபாடு நடத்தி, தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
பின் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், சம்பந்தப்பட்ட இடத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க:உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி தரிசன விழா: முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியர்!