தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விற்காமல் கிடக்கும் கோரைப் பாய்கள்... பயிரை நடலாமா? வேண்டாமா? - கலங்கும் காவிரி விவசாயிகள்! - korai grass agriculture

ஆறு மாத கால பயிரான கோரைப் புற்களின் முதல்கட்ட அறுவடை நிறைவடைந்து, தற்போது இரண்டாம் கட்ட பயிர் நடவுக் காலம் தொடங்கிவிட்டது. நிலத்தையும் பண்படுத்திவிட்டால் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீரால் கோரைப் புல் விவசாயத்தைத் தொடங்கிவிடலாம். ஆனால் போதிய விலையின்றி எப்படி பயிர் நடவு செய்வது என்று கூறி சோர்ந்துபோனார்கள் கரூர் விவசாயிகள்...

கோரை
கோரை

By

Published : Jun 28, 2020, 3:15 PM IST

ஒரு தடவை நிலத்தை பண்படுத்திவிட்டாலே அடுத்த சில வருடத்திற்குக் கவலையில்லாமல் இருக்க கோரைப் புல் விவசாயம் செய்யலாம். தரமான உரம், வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் ஆறு மாசத்துக்கு ஒரு முறை அறுவடை செய்வதற்கேற்றார் போல கோரைப் புல் வளர்ந்துவரும். முதல் அறுவடை மட்டும் பத்து மாதம் எடுத்துக் கொள்ளும், அடுத்தடுத்த முறை ஆறு மாசத்திலேயே அறுவடை செய்ய முடியும்.

கரூர் மாவட்டம் நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம், புஞ்சைபுகழூர், தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், குளித்தலை, நங்கவரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கோரைப்புற்கள் பயிரிடப்படுகின்றன. இதற்குக் காவிரி நீர்ப் பாசனம்தான் பிரதான நீராதாரம்.

கோரை புற்கள்

கோரைப் புற்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துதான் கோரைப் பாய் தயாரிக்கப்படுகிறது. தற்போது கோரைப் புற்கள் அறுவடைசெய்யப்பட்ட நிலையில், அதனுடைய விலை ஒரு மடங்கு குறைக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விவசாயி நாகராஜ், “வருடத்திற்கு இரண்டு முறை என கோரை விவசாயம் செய்துவருகிறோம். தற்போது கரோனா நெருக்கடியால் பாய்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசென்று விற்க முடியாத நிலை உள்ளது. இதனால் எங்களுக்குப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டுக் கோரைப் புல் ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து 600ஆக குறைந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது” என்றார்.

கோரைப்பாய்

கோரைப் புல் கட்டு விலை குறைந்ததால் வயலில் வேலைசெய்யும் கூலியாள்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என விவசாயி புலம்புகிறார். இதனிடையே கோரைப் பாய்கள் சங்கத்தின் நிர்வாகி செந்தில், “தாத்தா காலத்திலிருந்து சுமாராக கடந்த 70 ஆண்டுகள் இந்தத் தொழிலைப் பாரம்பரியமாகச் செய்துவருகிறோம். கரோனா காரணமாக பண்டிகைகள் நடைபெறாததால் கோரைப் பாயின் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது.

ஊரடங்கால் சில்லரை வியாபாரிகள், சைக்கிள் வியாபாரிகள் பாய்களை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பாய்களை வாங்கிக்கொண்டு எங்களால் விவசாயிகளுக்கு சரிவர கூலி கொடுக்க இயலவில்லை” என்றார்.

கோரை புல் விவசாயத்தின் விரிவான பார்வை...!

இந்த வருடத்தின் முதல் அறுவடை முடிந்து இரண்டாம் கட்ட பயிர் நடவுக் காலம் வந்துவிட்டது. நிலத்தையும் பண்படுத்திவிட்டால் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீரால் கோரை புல் விவசாயத்தைத் தொடங்கிவிடலாம். ஆனால், கையிருப்பு இல்லாமல் விவசாயிகள் தயக்கம்காட்டுகின்றனர். அரசு அவர்களின் நெருக்கடியை புரிந்துகொள்வது காலத்தின் கட்டாயம்.


இதையும் படிங்க: கானல் நீரான காவிரி! - கிராம மக்களுடன் தூர்வாரி மீட்டெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details