தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி - நீர் கொண்டுவர விவசாயிகள் யோசனை! - tamilnadu lake details

கரூர் : தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரிகளில் ஒன்றான பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீர் வராததால் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

lake

By

Published : Oct 14, 2019, 10:46 AM IST


பஞ்சப்பட்டி ஏரி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி கடந்த 15 ஆண்டுகளாக வறண்டுக் கிடக்கிறது. இதில் 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம். கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பஞ்சப்பட்டி ஏரி, 1837இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடவூர் ஜமீன்தாரின் ஆளுகைக்குட்பட்டிருந்த திண்டுக்கல் மாவட்டத்தின் வனப் பிரதேசங்களில் இருந்து ஓடி வரும் காட்டாற்று நீரைச் சேமித்து வைக்கவே இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரியின் பரப்பளவு 1,217 ஏக்கர் ஆகும். மேலும் 44 மீ உயரம் கொண்டிருக்கும் இந்த ஏரிக்கரையின் நீளம் 2,050; ஏரியின் அகலம் 5 மீட்டராகும். மழைக் காலங்களில் மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் மழைநீர் பாலவிடுதி, தரகம்பட்டி, மைலம்பட்டி, சிந்தாமணிபட்டி வழியாக அப்பகுதிகளில் உள்ள 24 ஏரிகள், 124 குளங்களை நிரப்பிய பின் கடைசியாக பஞ்சப்பட்டி ஏரிக்கு வரும். இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் தென்கரை வாய்க்காலில் சென்று திருச்சி மாவட்டத்தின் குடமுருட்டி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

பஞ்சப்பட்டி ஏரி மூலம் போத்துராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பக்காபட்டி, வயலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு போதிய மழையின்மையால் கடந்த 15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன் கடலைப் போல கண்ணுக்கு எட்டிய வண்ணம் நீரால் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி இன்று நீரின்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது ஏரியை முழுவதும் சூழ்ந்துள்ள சீமைக் கருவேலமரங்கள் நிலத்தடி நீரை முற்றிலுமாக உறிஞ்சி, அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையக் காரணமாக இருந்து வருகிறது.

இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரக்கோரி, பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் அதே பகுதி மக்களும், விவசாயிகளும் மனுக்கள் கொடுத்தும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கரூர் பஞ்சப்பட்டி ஏரி

பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் கதவணையிலிருந்து தண்ணீரை அரசு நிச்சயம் கொண்டுவர வேண்டும் என்பதே அப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. ஏரி வறண்டு இருப்பதால் விவசாயம் செய்ய முடியாது ஏன்ற நிலையில் கிராமப்புற மக்கள் வேறு இடங்களுக்குச் சென்றதாகவும் அப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் கூறுகின்றனர்.

பஞ்சப்பட்டி ஏரியில் நீர் நிரம்பினால் அரசுக்கு பல லட்சம் வருவாய் மீன் குத்தகை மூலம் கிடைக்கும் என்றும், அரசுக்கு வருவாய் ஈட்டக்கூடிய விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஏரியை மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் காக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈ.டிவி.பாரத் செய்தியின் எதிரொலி - கருங்குள ஏரியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details