கரூர்: மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திற்குள் நேற்று (மே 11) இரவு 10 மணிக்கு மேல் அரசு நகரப்பேருந்தில் ஏறிய திருநங்கைகள் யாசகம் கேட்டுள்ளனர். அப்போது, பயணிகளுக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், அடிதடியும் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கரூர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் பேருந்து நிலையத்திற்குள் உருட்டுக்கட்டைகளுடன் நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு அரசுப்பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளையும், பேருந்து நிலையத்திற்குள் இருந்த அலுவலகத்தின் கண்ணாடியினையும் உடைத்ததாகத் தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் காரணமாக பயணிகளும், பொதுமக்களும் அலறி அடித்துக் கொண்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே ஓடினர். இந்த கலவரத்தினை செல்போனில் படம் எடுத்த காவல் துறையினரும், பயணிகளும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரும் தாக்கப்பட்டனர்.
இந்த கலவரம் காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வெளியில் சென்று நின்று கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.