கரூர் : போக்சோ சட்டத்தில் முதியவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பராய முதலியார் என்பவரது மகன் கணபதி (வயது 61). இவர், அதே பகுதியில் மாந்திரீகம், வெள்ளிக்கிழமை அருள்வாக்கு, சிறப்பு பூஜைகள் நடத்துவதாகக் கூறி ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் பொதுமக்களை வரவழைத்து பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
பாலியல் சீண்டல்- கைது
அதன்படி பூஜையில் கலந்துகொண்ட தந்தையை இழந்த மூன்று வெவ்வேறு சிறுமிகளை மட்டும் தனியாக வரவழைத்து வீட்டில் பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள், கடந்த 2019ஆம் ஆண்டு வெங்கமேடு காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் வெங்கமேடு காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு, வெள்ளிக்கிழமை (நவ.12) வெளியானது. கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பினை அறிவித்தார். 25 ஆண்டு சிறை
அதன்படி, முதியவர் கணபதிக்கு காவலர்கள் தாக்கல் செய்த சாட்சியங்கள் ஆதாரங்கள் அடிப்படையில் மொத்தம் 25 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1.60 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தலா இரண்டு லட்சத்து 60 ஆயிரம் நிவராண தொகை வழங்க வேண்டும் என்றும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க : இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: அரசு மருத்துவர் கைது