கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றின் குறுக்கே மேலப்பாளையம் - கோயம்பள்ளி இடையே சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு பாலப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் முடிவடைந்து சுமார் ஐந்து ஆண்டுகளாகியும் பாலத்தின் இருபுறமும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்தப் பாலம் தற்போதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இரு கரைகளில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், விளை பொருட்கள் ஆகியவற்றை உரிய நேரத்தில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆறு பெரும்பாலான காலங்களில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடந்தாலும், மழை காலங்களில் திறந்துவிடப்படும் வெள்ள நீர் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு செல்கின்றன. மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்தப் பாதையை கடந்து செல்வதற்கு வேறு வழிகளும் இல்லை.