தமிழ்நாடு அரசு மதுபான கடைகளைத் திறந்துள்ள நிலையில், கரூர் எம்பி ஜோதிமணி, ஒரு கோடி பெண்களிடம் டாஸ்மாக் திறப்பு குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்து கேட்கும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்தக் கருத்துகளின் பதிவுகள் அனைத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் நோக்கில் கடந்த 45 நாள்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மக்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் தமிழ்நாடு அரசு மதுபான கடைகளைத் திறக்க ஏற்பாடு செய்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.