கரூர் நகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக எம்பியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக கூறி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இன்று(ஆகஸ்ட் 10) காலை முதல் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தார்.
இதனால், நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கரூர் நகராட்சியில் வெங்கமேடு பகுதியில் ஜாமியா நகர் பகுதியில் தார்சாலை அமைக்க 9.15 லட்சம் ரூபாய், சின்ன ஆண்டாள் கோயில் பகுதியில் பெண்களுக்கு அத்தியவாசியமான கழிப்பறைக் கட்டடம், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட மார்னிங் ஸ்டார் பள்ளியின் மேம்பாட்டுப் பணிகள், ரயில் நிலையத்தில் பேருந்து நிறுத்தம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக எம்பி நிதியில் இருந்து மார்ச் மாதம் 17.15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினேன்.