கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூரில் இருந்து கட்டளை செல்லும் காவிரிக் கரையில் உள்ள கும்பகுழி வடிகால் பாலம், ஆங்கிலேயர் காலத்தில் 1924ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது கும்பகுழி வடிகால் பாலம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
சிதிலமடைந்து காணப்படும் கும்பகுழி வடிகாலை சீரமைக்கக்கோரி, கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் திடீரென பாலத்தின் முன் பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகுழி வாய்க்கால் மூலம் வெளியேற்றப்படும் நீர் உடனடியாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மாயனூரில் இருந்து மேலமாயனூர், கட்டளை, ரங்கநாதபுரம் உள்ளிட்டப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித் தீவுகள் போல் மாறின. மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் ஊரைச் சுற்றி செல்லும் அவலத்திற்குத் தள்ளப்பட்டனர்.