கரூர்:திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்திலுள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயத்தில் கரூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கரூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வைகாசி திருவிழாவின் முதல் நிகழ்வாக கம்பம் நடும் நிகழ்ச்சி இன்று (மே 08) நடைபெற்றது.
கம்பம் நடுதல் என்பது கோயில் அறங்காவலர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவதாக ஐதீகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 15 நாள்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தம் செலுத்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய கூட்டம் தினந்தோறும் அலைமோதும்.
தொடர்ந்து மே 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ அலங்காரத்தில் பகுதிவாரியாக மாரியம்மன் ஆலயத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மே 15ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, 23ஆம் தேதி திருத்தேர், மாவிலக்கு, அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் 15 நாள்களுக்கு நடைபெறுகின்றன.