கரூர்:கொங்கு மண்டலத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு மே 25ஆம் தேதி மாலை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரூர் மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அமராவதி ஆற்றங்கரையில் குழந்தைகளுடன் திரண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக இவ்விழா நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு இவ்விழா நடைபெறுவதால் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.
கரூர் நகர உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கம்பம் ஆற்றில் விடும் விழா கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவில் இன்று (மே 26) புஷ்ப விமானம், நாளை (மே 27) கருட வாகனம், நாளை மறுநாள் (மே 28) மயில் வாகனம், 29ஆம் தேதி கிளி வாகனம், 30ஆம் தேதி வேப்ப மர வாகனம், 31ஆம் தேதி பின்ன மர வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. வரும் ஜூன் 1ஆம் தேதி புஷ்ப அலங்காரம், 2ஆம் தேதி பஞ்ச பிரகாரம், 3ஆம் தேதி புஷ்ப பல்லக்கு, ஸ்ரீமாரியம்மன் பல்லக்கு, ஸ்ரீமாவடி ராமசாமி பல்லக்கு, 4ஆம் தேதி வெள்ளி ஊஞ்சல், ஜீன் 5ஆம் தேதி சம்புரோசனை அம்மன் குடிபுகுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கரூர் மாரியம்மன் கோயில் விழாக்குழுவினர் மற்றும் இந்து அறநிலைத்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தம் செய்யலாம்!