பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிராக தீர்மானம்...! - கரூர் வட்டாட்சியர் அலுவலகம்
கரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுய ஆட்சி இந்தியா கட்சி நடத்திய இந்திய பெண்கள் பொதுக்கூட்டத்தில், பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுய ஆட்சி இந்தியா கட்சி ஏற்பாட்டில் ஜனநாயகம் குடியாட்சி மாண்புகளை மீட்டெடுக்க மாற்றத்திற்கான இந்திய பெண்கள் பொதுக்கூட்டம், மாநில இணைச் செயலாளர் ஜானகி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணைத் தலைவர் கிறிஸ்டினா சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய பொள்ளாச்சி பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்முறைகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு மது விற்பனையைக் கைவிட வேண்டும் அல்லது அனைத்து குற்றங்களுக்கும் அரசே முதல் குற்றவாளியாக பொறுப்பேற்க வேண்டும் என கடுமையாக வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுய ஆட்சி இந்தியா கட்சி கரூர் மாவட்ட குழு உறுப்பினர் சுவாதி, பெண்கள் இயக்க மாவட்ட பொருளாளர், துணைத் தலைவர், தமிழ்நாடு வாழ்க விவசாய இயக்க மாநிலக் குழு உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.