கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் காலனி பகுதியில் அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளி தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 2004ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், போர்வெல், மேற்கூரை, பள்ளியின் தரைகள், மின் விசிறி, மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டு உடைகள், நூலகம், விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறை வசதி உட்பட தன்னார்வலர்களைக் கொண்டு சிறப்பு உதவியுடன் இயங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக, இப்பள்ளி மிகவும் குறுகிய இடத்தில் அமைந்திருப்பதால், இங்கு ஒரு கட்டடத்தில் இரண்டு வகுப்புகள் நடைபெறும் அவல நிலை உள்ளது.
இதனால் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளியின் கூரைகளை அகற்றி அடுக்குமாடி பள்ளியாக சீரமைத்தால், குறைந்த இடத்தில் அதிக மாணவர்கள் கல்வி பயில இயலும் என கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் அரசுப் பள்ளிகள் தன்னார்வ மற்றும் தனியார் அமைப்பின் மூலம் சிறப்பு நிதியுடன் செயல்பட்டு வருவதற்கு முக்கியக் காரணம், அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள்.
ஆம். இப்பள்ளியிலும் அவ்வாறு உதவியிருக்கிறார், ஐந்தாம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வரும் திலகவதி. இவர் கடந்த 16 ஆண்டுகளாக, இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கடந்த ஏழாம் தேதி விருதினையும், விருதுப் பணம் ரூ.10 ஆயிரத்தையும் வழங்கினார்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை திலகவதி அப்பள்ளியில் இதுவரை தனது சொந்த செலவில் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாது, தன்னார்வ தனியார் அமைப்பின் மூலம் நிதியைத் திரட்டி, அரசுப் பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக மாற்றியுள்ளார்.