கரூர்: பாகநத்தம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியரை, கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள வளரிளம் பருவமடைதல் பகுதியில் இடம் பெற்றுள்ள பாலியல் விழிப்புணர்வு குறித்த பாடத்தை கற்பித்தபோது, அவர் ஆபாசமாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டை மறுத்து, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கரூர் மாவட்டத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக, இன்று கரூர் தான்தோன்றிமலையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட கிளை சார்பில் நடந்த கூட்டம் தலைவர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, "பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் செயல்பட்டுள்ளார்.
ஆசிரியர் மீது புகார் அளித்ததாகக் கூறப்படும் பெற்றோர், நேற்று பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை முற்றுகையிட்டு, புகார் தவறாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
திறமைமிகுந்த ஆசிரியர்
கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், அறிவியல் பாடத்திட்டத்திற்கான கருத்துரு அனுப்பும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ள, திறமைவாய்ந்த அறிவியல் ஆசிரியராக செயல்பட்டவரை, பணியிடை நீக்கம் செய்த மாவட்டக் கல்வி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பள்ளியில் மீண்டும் ஆசிரியர் பணியமர்த்த வேண்டும். இல்லாவிடில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து ஆசிரியர் சங்கங்கள் முடிவு மேற்கொள்ளும்," எனத் தெரிவித்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் மலைக்கொழுந்தன் உள்ளிட்டோர் மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆசிரியர் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறாவிட்டால், கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருப்பதால் மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நடிகர் விஜய் சேதுபதி மீது அவதூறு வழக்கு - உண்மையை ஆராயும் போலீஸ்