கிருஷ்ணராயபுரம் :கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 77 தொடக்கப் பள்ளிகளில் சோதனை அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுக்குப் பின்னர் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி உணவு திட்டம், மாவட்டம் முழுவதும் சுமார் 705 மையங்களில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 29 ஆயிரத்து 449 மாணவ மாணவிகள் காலை சிற்றுண்டி திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.
இதனை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து தினந்தோறும் ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலன்செட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆய்வு நடத்தினார்.
அப்போது காலை சிற்றுண்டி உணவு மீதம் இருப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சமையலரிடம் கேட்டறிந்த போது, அங்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கு மேல் காலை சிற்றுண்டி சாப்பிடுவதில்லை என்று கூறினார். இதற்கான காரணத்தை கூறிய போது ஆட்சியரே ஒரு நிமிடம் அதிர்ந்து போனார். ஆம் அந்த மாணவர்களின் பெற்றோர் ஊர் கூட்டத்தை கூட்டி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண்மணி சமையல் செய்வதால், அதனை யாரும் சாப்பிடக்கூடாது என சாதிய பாகுபாடு நோக்கத்தோடு முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, உணவு அருந்தாத 15 பள்ளி மாணவர்களின் பெற்றோரை அழைத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விசாரணை நடத்தினார். பாலசுப்பிரமணி என்ற நபர் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த பெண் சமைத்தால் மற்ற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் உணவு உட்கொள்ள மாட்டார்கள்.
மீறி சமைத்து பரிமாறினால், பள்ளியில் பயிலும் 15 மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்வோம் என ஆட்சியரிடமே அடாவடி தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக பாலசுப்பிரமணியை அரவக்குறிச்சி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சாதிய பாகுபாடு காட்டும் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மாணவர்களின் நலன் கருதி உடனடி வழக்குப்பதிவு செய்யாமல் அறிவுரை வழங்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தேவையற்ற சாதிப்பெருமை பேசி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வில் காலை சிற்றுண்டி திட்டத்தில் பட்டியலின பெண் உணவு தயாரித்ததால், உணவு சாப்பிட கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படும் சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:Editor Lenin: ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு மானியம்; அரசுக்கு எடிட்டர் லெனின் கோரிக்கை