கரூர்-திருச்சி சாலையில் உள்ள லைட்ஹவுஸ் கார்னர் அமராவதி பாலம் அருகே உள்ள ரவுண்டானாவில், கடந்த இரண்டு நாள்களாக இரவு பகலாக ரவுண்டானா சீரமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. அவ்விடத்தில் முன்னாள் முதலமைச்சர் சிலை ஒன்று அமைக்கப்படுவதாகவும், அதனை பிப்ரவரி 21ஆம் தேதி கரூர் வருகைதரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், பிப்ரவரி 19ஆம் தேதி இரவு கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் இருந்த காந்தி சிலை அகற்றப்பட்டு கரூர் நகராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் நேற்று மதியம் 2 மணியளவில் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நேற்று இரவு 10 மணியளவில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காந்தி சிலை அகற்றப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "70 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட காந்தி சிலையை காங்கிரஸ் கட்சியினரிடம் எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து கரூர் நகராட்சி ஆணையரிடம் விசாரித்தால் காந்தி சிலை நகராட்சி அலுவலகத்திற்குள் எப்படி வந்தது என்று தெரியவில்லை எனக் கூறுகின்றனர்.
பொதுப்பணித் துறையினர் சிலை அகற்றும் பணி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளிக்கின்றனர். காந்தி சிலை லைட் ஹவுஸ் ரவுண்டானாவிலிருந்து கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு எப்படி நடந்தா சென்றது?
அமைச்சருக்கு எச்சரிக்கைவிடுத்த எம்பி ஜோதிமணி கரூரில் உள்ள அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் அகற்றப்பட்டு, அவரது எம்ஆர்வி டிரஸ்டுக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பொது இடத்தை தாரைவார்த்து கொடுத்துள்ளது. இதனைச் சட்டத்துக்குப் புறம்பாக எம்.ஆர். விஜயபாஸ்கர் திருடிக் கொண்டார். அமைச்சராக இருந்து தனியார் சொத்துகளை வாங்கி குவித்தது போதாது என்று தற்போது பொது சொத்துகளையும் சுருட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த இடத்தில் வேறு சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிகிறது. வரும் 21ஆம் தேதி கரூர் வரும் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து இது குறித்து முறையிட உள்ளோம்.
மேலும், காந்தி சிலை இருந்த இடத்தில் மீண்டும் வேறு சிலையை வைத்தாலோ, எந்த கட்டுமான பணிகளையாவது மேற்கொண்டாலோ மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனவும் எச்சரித்தார்.
இந்தச் சூழலில் இன்று காலை வைக்கப்பட இருந்த இடத்தில் எம்பி ஜோதிமணி போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதையடுத்து, காவல் துறையினர் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.