'குவாரி வேண்டாம்.. வாடும் பயிர்களுக்கு தண்ணீர் திறங்க' - கரூர் கலெக்டரிடன் விவசாயிகள் மனு கரூர்:கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று (பிப்.24) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயச் சங்க நிர்வாகிகள், அனைத்து அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 10-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கருகிய நிலையில் உள்ள வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்குக் குறைந்தபட்சம் 15 நாட்கள் மாயனூர் கதவணையிலிருந்து பழைய கட்டளை மீட்டு வாய்க்கால் குமுளி 23 மற்றும் 26-ல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து நெய்தலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், 'கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியில் வாழை, கரும்பு, நெல், உளுந்து, பிச்சிப் பூ, மல்லிகைப் பூ உள்ளிட்ட பயிர் வகைகள் 450 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக, காவிரி ஆற்றில் மாயனூர் கதவணையிலிருந்து பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் 15 நாட்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட்டால், காயும் பயிர்கள் காப்பாற்றப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படும் என கோரிக்கை மனு அளித்திருப்பதாகக் கூறினார்.
இது தொடர்பாகப் பலமுறை குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு இயக்க செயற்பொறியாளர் மற்றும் திருச்சி கோட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோரிடம் தண்ணீர் திறந்து விடக் கோரி, மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை எனவும்; ஆகவே, கரூர் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இவ்வாறு விவசாயிகள், வாழ்வாதாரத்திற்குத் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, கரூர் மாவட்ட தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.ராஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "கரூர் மாவட்டம் புகலூர் வட்டத்திற்குட்பட்ட கூனம்பட்டி, கரை தோட்டம் புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த 'அம்மன் கல் குவாரி' அனுமதி இன்றி தொடர்ந்து செயல்படுவதாகக் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து சட்ட விரோத கல்குவாரி நிறுத்தப்பட்டது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சம்பந்தப்பட்ட அம்மன் கல்குவாரி சார்பில் மீண்டும் அதைத் திறப்பதற்கு, அனுமதி கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறையில் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே, கரைத்தோட்டம் புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்ட கல்குவாரிகளால் காற்று மாசு, நிலம் மாசு, நீர் மாசு உள்ளிட்ட மாசு ஏற்பட்டு கால்நடைகள் வளர்க்க முடியாமல் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரபு சங்கரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், "அம்மன் கல்குவாரிக்குக் கரை தோட்டம் புதூர் பகுதியில் செயல்பட்டபோது ஏற்பட்ட சாலை சேதம், இதுவரை பலமுறை கோரிக்கை அளித்தும், மீண்டும் புதுப்பித்துத் தரப்படவில்லை என்றும் நிலம், நீர், காற்று ஆகியவை முற்றிலும் மாசுபட்டுக் காணப்படுவதாகவும், இந்நிலையில் புதிதாக அனுமதி கேட்டு நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றார். தொடர்ந்து அப்பகுதியில் புதிதாக எந்த கல்குவாரிக்கும் அரசு சார்பில் அனுமதி வழங்கக்கூடாது என்றும் விவசாயிகள் பொதுமக்கள் அப்பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என வேதனையுடன் கூறினார்.
இது தவிர, அப்பகுதியில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பிபிசி (Bharat Petroleum Corporation) நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் குழாய்கள் நிலத்தில் பதிக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் கல்குவாரிகளால் வைக்கப்படும் வெடி மருந்துகளால் எண்ணைக் குழாயில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால், மிகப்பெரிய தீ விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரித்தார். எனவே அரசு மாவட்ட நிர்வாகம் மக்களின் நலன் கருதி புதிய கல்குவாரிகளுக்கு அப்பகுதியில் அனுமதியை அளிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: அரசு மணல் குவாரியில் மோசடி - அரசு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு?