கரூர்:கடந்த சில வாரங்களாக திமுக - பாஜகவினர் இடையே அண்ணாமலை பயன்படுத்தும் ரஃபேல் வாட்சுக்கான பில் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் ரஃபேல் வாட்சுக்கான பில் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று கூறியதோடு அதற்கு கெடு விதித்திருந்தார்.
ஆனால், டிசம்பர் 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "2021-ஆம் ஆண்டுக்கு பிறகு வாங்கப்பட்ட ரஃபேல் வாட்ச் ரசீது உள்ளிட்ட வருமான விவரங்களை விரைவில் தமிழக மக்களை சந்திப்பதற்காக துவங்க உள்ள பாதயாத்திரை முதல் நாளில் எனது அனைத்து சொத்து விவரங்கள் வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டு செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். பொதுவெளியில் தனது சொத்து விவரங்களை வழங்கியதில் ஒரு பைசா அதிகமாக இருந்தாலும், தனது சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக பதிவிட்டார். இதுபோல திமுகவினர் சொத்து விவரங்களை வெளியிட தயாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவினர் தேர்தலில் போட்டியிடும் பொழுது சொத்து விவரங்களை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர் என தெரிவித்திருந்தார். எனவே பில் இருக்கிறதா இல்லையா? என்பதற்கான ஒரு பதிலை அளித்தால் போதும். ஏப்ரல், மே மாதம் வரும் என 'கோழி காலையில் கொக்கரக்கோ என கூவுது' என்று கூறுவதை போல நகைச்சுவையாக உள்ளது என சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் கேள்வி எழுப்பி இருந்தார்.