மனிதநேயத்துடன் உதவி செய்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கரூர்: கடவூர் வட்டம், கருங்கல்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் விபத்தின் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இரண்டு கால்கள் செயல் இழந்த நிலையில் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் தனது உடல்நிலை காரணமாகத் தான் செய்து வந்த மெக்கானிக் தொழிலை விட்டுவிட்டதால், வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
சிவக்குமாருக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். மாதந்தோறும் ரூபாய் ஐந்தாயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் இருந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற சூழ்நிலையில் கடவூர் அருகே உள்ள மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற்று வந்தார்.
இது குறித்து மையிலம்பட்டி மருத்துவர்கள் மூலம் சிவக்குமாரின் சூழ்நிலையை அறிந்து கொண்ட கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அடுத்த ஆறு மாதத்திற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் இன்று (ஆகஸ்ட் 21) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து மருந்துகளைக் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க:வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 1300 வாக்குச்சாவடிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்!
இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் ரமாமணி, கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பேட்டி அளித்த சிவகுமார், “கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களையும் செயலிழந்து வேறொருவரின் துணை இன்றி எந்தப் பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறேன். மேலும், தனக்கு மாதம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 5,000 மதிப்பிலான மருந்து மாத்திரைகள் மருத்துவர் உபகரணங்கள் இருந்தால் மட்டுமே தான் உயிர் வாழ முடியும் என்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக” தெரிவித்தார்.
இந்நிலையில், தனக்கு மருத்துவ உதவி வேண்டுமென அறிந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அடுத்த ஆறு மாதத்திற்குத் தேவையான மருத்துவ உதவியைச் செய்து கொடுத்ததுடன், மருத்துவ உதவி தொடர்ந்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியதற்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார். கரூர் மாவட்ட ஆட்சியரின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சாலைகளில் முடங்கிக் கிடக்கும் சென்னையின் அடையாளம்.. சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை.. மெட்ராஸ் டே சிறப்பு தொகுப்பு!