கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மலர்விழியை தேர்தல் அல்லாத பணிக்கு நேற்று முன்தினம் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக இணை மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்த பிரசாந்த் மு.வடநேரே கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தான்தோன்றிமலையில் உள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரசாந்த் மு.வடநேரே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளை கண்காணிக்கும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பொறுப்பையும் அவர் வகிக்க உள்ளார்.
இவர், ஏற்கனவே திருவண்ணாமலை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள சூழலில், பணப்பட்டுவாடா புகார்கள் மீதான நேர்மையான நடவடிக்கை, அமைதியான தேர்தல் ஆகியவை புதிய மாவட்ட ஆட்சியருக்கு மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்நாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகிய மூவரும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற வேட்பாளர்கள் என்பதால், மாவட்ட தேர்தல் அதிகாரியின் கண்காணிப்பு பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் தலைமை அலுவலர்கள் ஆலோசனை!