கரூர்:மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் உள்ள மாநகராட்சி டிச.20ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்ற மாமன்ற ஆலோசனை கூட்டத்தில், கரூர் மாநகராட்சி 36 வது வார்டு பகுதியில் மணக்களம் என்ற தெரு பெயருக்கு பதிலாக, உதயநிதி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதியில் மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் தவிர, மற்ற மாமன்ற உறுப்பினர்கள் சிபிஎம், காங்கிரஸ், திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டவுள்ள உதயநிதி தெருவில், உதயநிதி முதல் தெரு, உதயநிதி இரண்டாவது தெரு, உதயநிதி மூன்றாவது தெரு என பெயர் மாற்றம் செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தித்தாள்களில் வெளியானது.
ஆனால் கரூர் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று முக்கிய செய்தி ஒன்றை வழங்கியுள்ளார். அந்த குறிப்பில் கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பெயர் வைப்பது சம்பந்தமாக எவ்விதமான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.