கரூர்:தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி கரூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். சரவணகுமார் கரூர் மாநகராட்சியின் ஆணையராகப் பொறுப்பேற்றது முதல் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய நிலுவை சொத்து வரி வசூல், மாநகராட்சி கட்டிடங்களில் குத்தகை எடுத்த குத்தகை தாரர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை, சாலையோர பாதை ஆக்கிரமிப்பு மீட்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அதிரடி காட்டி வந்தார்.
இந்நிலையில், நேற்று (டிச.13) கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையான கடிதம் வழங்கப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் முதல் பொருளாக, கரூர் பேருந்து நிலையம், மாநகராட்சி வர்த்தக கடைகள் உள்ளிட்ட, குத்தகை வரி நிலுவை பாக்கி செலுத்தாத குத்தகைத் தாரர்களின் 356 கடைகளின் குத்தகை உரிமங்கள் ரத்து செய்வது தொடர்பாக, கூட்டப்பொருள் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த குத்தகைத் தாரர்களுள் சிலர் திமுகவிலும், சிலர் திமுகவின் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு அரசியல் ரீதியாகப் பக்க பலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து, கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை மாற்றம் செய்ய வேண்டுமென அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று (டிச.13) இரவு, கரூர் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் திடீரென மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஈரோடு மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளர் இருந்த சுதா, கரூர் மாநகராட்சி ஆணையாளராகப் பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெடி வெடித்துக் கொண்டாடிய அரசியல் கட்சியினர்: அதனைத் தொடர்ந்து, கரூர் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் மாற்றப்பட்டதற்கு, கரூர் ஜவகர் பஜார் கடைவீதியில் பாமகவின் கரூர் மாநகர நிர்வாகிகள், இந்து மக்கள் கட்சியினர் மற்றும் காமராஜ் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க கரூர் மாவட்ட தலைவர் இளங்கோ, விசிக நிர்வாகி விஜி உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.