கரூர்: திருச்சி மாவட்டத்திலிருந்து 1995ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு புதிய கட்டடம் திறக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படத் தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் எவ்வித தனிக் கவனமும் செலுத்தப்படுவதில்லை.
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவுக்குள்பட்ட மணதட்டை கிராமம் ஏழுநூற்றிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (45). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த இரண்டு மாத காலமாக பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்கப் பெறாததால், இது சம்பந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுக 45 கிலோ மீட்டர் பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தன் தங்கையுடன் வருகைபுரிந்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வரை சுமார் 200 மீட்டர் தூரம் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் தரையில் தவழ்ந்தபடி வந்ததைப் பார்த்த அனைவருக்கும் மன நெருடலை ஏற்படுத்தியது.