கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அண்ணா வளைவு ரவுண்டானாவில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கட்சிக் கொடிகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டிகின்றனர்.
பொதுவாக நிகழ்ச்சி நடைபெறும் நாள்களில் கட்சியினர் கொடிகளை கட்டுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிளக்ஸ், பேனர்கள் தடை செய்யப்பட்டதால் பெரும்பாலானோர் கொடிகளைப் பரக்கவிடுவதை வாடிக்கையாக்கிவிட்டனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அஇஅதிமுக சார்பில் கட்டப்பட்டுள்ள கட்சிக்கொடி அகற்றப்படாமல் உள்ளது.
இதனால் எதிர்க்கட்சியான திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி கொடிகளை ரவுண்டானா பகுதியில் கட்டியுள்ளது. இருநாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில தலைவர் வந்திருந்தார். அப்போது காங்கிரஸ் சார்பில் கட்டப்பட்ட கொடிகள் தற்போது வரை அகற்றாமல் இருக்கின்றன.
கரூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் ஆகியோர் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கட்சிப்பதவியில் ஏற்பட்ட பிரச்னை... சொந்தக் கட்சி அலுவலகத்தையே முற்றுகையிட்ட திமுகவினர்