கரூர்: மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளைத் தன்வசம் வைத்திருந்த அதிமுக, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின்போது அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் முத்துக்குமார், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.
ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையனை எதிர்த்து முத்துக்குமார் மீண்டும் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் மாவட்டத் துணைத் தலைவர் பதவியைப் பெற்றுவிட அதிமுக சார்பில் முத்துக்குமார் தீவிர பணியாற்றினார்.
ஆனால், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர பரப்புரை செய்து, வியூகங்கள் வகுத்ததன் விளைவாக, அதிமுக வசமிருந்த எட்டாவது மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியை திமுக 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்வசப்படுத்தியது.
இதன் பின்னர், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத்தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றபோது, தேர்தல் அலுவலர் மந்திராசலம் முன்னறிவிப்பின்றி தேர்தலை ஒத்திவைத்தார். இதனையறிந்து, அங்கு வந்த அதிமுக மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துத் துறை முன்னாள்அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர்கள், தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தேர்தல் அலுவலரின் புகாரின்பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்பிணை பெற்றனர்.