கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில், அமராவதி ஆற்றில் கம்பம் இறக்கி திருவிழாவை நிறைவு செய்வது வழக்கம். இதில், தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று கலந்துக் கொண்டு வழிபாடு செய்தனர்.
அப்போது, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் மக்களவை வேட்பாளர் ஜோதிமணி, அரவகுறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் கோயிலுக்குள் வந்தனர்.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு திமுகவினர் எதிர்த்து கூச்சலிட்டனர். இதுபோன்ற நிகழ்ச்சியில் பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆதலால் ஜோதிமணியை கோயிலுக்குள் அனுப்பக் கூடாது என்று அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் வாசலில் காத்திருந்தார். பின்னர், செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி இருவரும் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறினர்.
கோயிலுக்குள் ஜோதிமணி நுழைய அனுமதி மறுப்பு இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க இரு கட்சியினரையும் சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவிழாவின் இறுதி நாளில் அரசியல்வாதிகளால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடுமோ என பொதுமக்களும், பக்தர்களும் அச்சம் அடைந்தனர். ஒருவழியாக காவல்துறையினர் அவர்களை சமாளித்து அனுப்பிய பிறகு, கம்பம் ஆற்றுக்கு புறப்பட்டது. அப்போது கம்பம் செல்லும் வழியெங்கும் காத்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வணங்கினர். இதையடுத்து கம்பத்தை இறுதியாக அமராவதி ஆற்றில் வைத்து பூஜைகள் செய்து, தீர்த்த குளத்தில் இறக்கினர்.