தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் வடிகால் பணியால் பாதிப்படைந்த வீடு.. பணம் கேட்கும் திமுக கவுன்சிலர்.. கரூரில் பரபரப்பு! - Karur DMK Councilor Boopathi video

கரூரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழியால் பாதிப்புக்குள்ளான வீட்டை சரி செய்ய, 1 லட்ச ரூபாய் வரை திமுக கவுன்சிலர் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மழைநீர் வடிகால் பணிக்காக பாதிப்படைந்த வீடு.. பணம் கேட்கும் திமுக கவுன்சிலர்.. கரூரில் பரபரப்பு!
மழைநீர் வடிகால் பணிக்காக பாதிப்படைந்த வீடு.. பணம் கேட்கும் திமுக கவுன்சிலர்.. கரூரில் பரபரப்பு!

By

Published : Apr 11, 2023, 10:37 PM IST

Updated : Apr 12, 2023, 11:46 AM IST

கரூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழியினால் பாதிப்புக்குள்ளான வீட்டை சரி செய்ய, 1 லட்சம் ரூபாய் வரை திமுக கவுன்சிலர் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு

கரூர்: மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கரூர் ஜெ.ஜெ நகர் வடக்கு காந்தி கிராமம் 16வது வார்டில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணியில் வீட்டுச் சுவர் ஓரமாக மழை நீர் வடிகால் குழி தோண்டப்பட்டதால், கட்டடம் வலுவிழந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடு இடியும் சூழலில் இருந்ததால், வீட்டின் உள்ளே மற்றும் வீட்டிற்கு வெளியே ஜாக்கி மற்றும் தாங்கும் குச்சிகளை வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

இதனிடையே இது தொடர்பாக கான்ட்ரக்டர் தினகரன் என்பவர், அங்குள்ள பொதுமக்களிடம் மண் சரிய உள்ளதாகவும், தங்களது வீட்டில் இதனை சரி செய்ய வேண்டும் என்றால், 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தர வேண்டும் என்று பேரம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இதனை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் 16வது வார்டில் என்ன நடக்கிறது என்று விசாரணை செய்ய வேண்டும் என்றும், பொது மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த மழை நீர் வடிகால் பணி கான்ட்ரக்டர் தினகரன் என்பவர் மீதும், அதற்கு துணை நிற்கும் 16வது வார்டு திமுக கவுன்சிலர் பூபதி மீதும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், திமுக கவுன்சிலர் பூபதி, பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளிடம் பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், “கரூர் வடக்கு காந்தி கிராமம் ஜெ.ஜெ நகரின் நுழைவாயிலில் உள்ள முதல் வீடு எங்களது வீடு.

இதனால் மழை நீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட திடீர் பள்ளத்தால், எங்களது வீட்டுக்குள் விரிசல்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக கரூர் மாநகராட்சி அதிகாரிகள், அவசரம் அவசரமாக சுமார் 10க்கும் மேற்பட்ட ஜாக்கிகளை உள்ளே கொடுத்து வீட்டுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர், வீட்டின் சுவரை ஒட்டி கான்கிரீட் தளம் அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கேட்கத் தொடங்கினார்.

பின்னர் படிப்படியாக தற்போது 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்கிறார். இந்தத் தொகையை எங்களால் வழங்க முடியாத நிலையில் இருப்பதாக கூறிய பின்னரும், திமுக கவுன்சிலர் பூபதியை அழைத்து வந்து பணம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். திமுக கவுன்சிலர் பூபதியோ, வீட்டை தானே விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் பேரம் பேசுகிறார்.

எனது கணவரும், எனது கணவரின் தந்தையும் கஷ்டப்பட்டு சம்பாத்தியத்தில் கட்டிய வீடு இது. இதனை அபகரிக்கவும் முயற்சி நடக்கிறது. திமுக கவுன்சிலருக்கு எதிராக வெளியாகி உள்ள வீடியோவால், எங்கள் நிம்மதியை இழந்துள்ளோம். உடல் நலம் சரியில்லாத மாமியாரை வைத்து கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். ஆகையால், அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களின் அச்சத்தை உடனடியாகப் போக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:கரூரில் தொடரும் கந்து வட்டி, மீட்டர் வட்டி கொடுமைகள் - மிரட்டும் வசூல் வேட்டை; 10 பேர் கைது!

Last Updated : Apr 12, 2023, 11:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details