கரூர்:கரூர் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மணப்பாறை, வேடசந்தூர், விராலிமலை உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வருடாந்திர ஆய்வுப் பணிகளை, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவர்மலை, மேலப்பகுதி, கீழப்பகுதி, மாவத்தூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று (அக் 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள செங்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களைச் சந்தித்து பல்வேறு குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சிறப்பு பேட்டி அளித்த ஜோதிமணி எம்பி பேசுகையில், “வருடத்தில் 5 மாதங்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களைச் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டு அறிவது வழக்கம்.
100 வேலைத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதில்லை. இவைதான் மக்களின் குறைகளாக இருந்து வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் தனியாக வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு கடந்த 10 வாரங்களாக மத்திய அரசு திட்டப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்காமல், மத்திய அரசு காலதாமதப்படுத்தி வருகிறது.
இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஆய்வில், அனைத்து தொகுதிகளிலும் 60 சதவீத அளவிற்கு ஆய்வுப் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 40 சதவீத ஆய்வுப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.