கரூர்: கரூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கொடூரம் தொடர்பாகக் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று புகார் மனு அளித்தனர். கரூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், சுந்தரபாண்டி 23. கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் வேங்கடத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஊர் நாட்டாமை பெருமாள் மற்றும் செந்தில்குமார் அண்ணாதுரை ஆகியோர் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஊர் பொதுமக்கள் முன்னிலையில், பொது முடிவு எனக் கூறி சுந்தர பாண்டியனின் தாய், தந்தை மற்றும் அவரது மனைவியிடம் சுந்திர பாண்டியன் இறந்ததாக நினைத்து ஈம சடங்குகள் செய்தால் மட்டுமே சேர்த்துக் கொள்வோம் எனக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், முள்ளிப்பாடியில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கருப்புசாமி மதுரை வீரன் பட்டவன் ஏழு கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்குத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் போது, கோயிலுக்குப் பூசாரி ஆக உள்ள சுந்தரபாண்டி, கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கூறி கரகம் பாளித்தல், தீர்த்தம் கொண்டு வருவது போன்ற பல நிகழ்ச்சிகளில் அவரை ஒதுக்கி வைத்து, துவக்க நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.
மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், சுந்தரபாண்டி கோயில் பூசாரியாக எந்த பணியிலும் மேற்கொள்ளக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதாகத் தெரிவித்து உள்ளனர். எனவே சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கோயில் பூசாரியான தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாகக் கரூர் எஸ்பி அலுவலகத்தில் அவரது மனைவியுடன் புகார் மனு அளித்தார்.