கரூர் மாவட்டத்தில் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடிகள் இயங்கி வருகின்றன. திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசியில் ஒரு சுங்க சாவடி, திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டிகோட்டை அருகே ஒரு சுங்கசாவடி என இரண்டு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகின்றன.
அரசு, தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என இருசக்கர வாகனம் தவிர அனைத்து வாகனங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் தனியார் நடத்தி வரும் மணவாசி சுங்கசாவடி நிர்வாகத்தினர் முறையான சாலை பராமரிப்பு மேற்கொள்ளாததால் கரூர் மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடந்து சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் இப்பிரச்சினை குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், சுங்கசாவடி நிர்வாகத்திற்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆனால் அவரின் பரிந்துரையை ஏற்க மறுத்து சுங்க சாவடி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டுவந்தது.
இது ஒன்றிய அரசின் சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சுங்க சாவடி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளருக்கு கடிதம் ஒன்றை கடந்த சில நாள்களுக்கு முன்பு எழுதினார்.