கரூர்: வருமான வரித்துறை இயக்குனர் சிவசங்கரன் உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி, கல்லா சீனிவாச ராவ், பங்கஜ் குமார் மற்றும் சுசில்குமார் உள்ளிட்ட 4 வருமான வரித்துறை அதிகாரிகளை சந்திப்பதற்காக இன்று (மே 28) வருகை தந்தனர்.
இதனையடுத்து சரியாக மதியம் 12 மணியளவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வருமான வரித்துறை அதிகாரிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருமான வரித்துறை இயக்குநர் சிவசங்கரன், “வருமான வரித்துறை சோதனைக்குச் சென்ற பெண் அதிகாரி உள்பட 4 பேரையும் திமுகவினர் தாக்கி உள்ளனர்.
திமுகவினர் தாக்கியதில் பெண் அதிகாரிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்ற மூன்று அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மனதளவில் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி செய்யச் சென்ற இடத்தில் ஆவணங்களை பறித்தவர்கள் மீது மேலும் வழக்குகள் பதியப்படும்.
முதல் கட்டமாக உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் இன்று 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதற்கான வீடியோ மற்றும் மீடியா ஆதாரங்கள் உள்ளது.