தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனை கரூர்:கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நெருங்கிய உறவினரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மே 26 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சோதனை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின் போது, திமுக ஆதரவாளர்கள் சோதனை செய்ய சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை மேற்கொள்ளவிடாமல் தடுத்தனர். அப்போது அவர்கள் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. திமுகவினரின் இந்த செயல் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. எதிர்க்கட்சிகள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இச்செயலுக்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பின்னர் அதிகாரபூர்வ அனுமதியுடன் முழு சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டதில் பல ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சோதனை இன்னும் மூன்று நாட்களூக்கு தொடரப்படும் எனவும் கூறப்படுகிறது. தன் மீது பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு இந்த சோதனையின் முடிவுகள் அனைவருக்கும் பதிலளிக்கும்; மேலும் இது மக்களவை தேர்தலுக்காக நடத்தப்படும் 'நாடகம்' எனவும் அமைச்சர் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த பரபரப்பை இன்னும் கூட்டும் விதமாக, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பிரம்மாண்டமாக கட்டி வருவதாக கூறப்படும், புதிய வீட்டிற்கான கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில், வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று (மே 28) திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து முன்னதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பலமுறை தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் புதிதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு ஒன்றை கட்டி வருவதாகவும், இதுகுறித்து விரிவான விளக்கத்தை அமைச்சர் மக்கள் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் என்றும் வன்மையாக தன் கண்டனங்களை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுக்கு சங்கரின் இந்த கருத்திற்கு, எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. மே 25ஆம் தேதி தொடங்கப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பின்னர், சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், அவர் அமைச்சர் தற்போது பிரம்மாண்டமாக வேலைகள் நடைபெற்று வரும் புதிய வீட்டின் இடத்தில் நின்று எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அதில் இந்த வீட்டையும் சோதனை செய்யுங்கள் என்று பதிவிட்டு இருந்ததும் இந்த சோதனைக்கு தூண்டுகோளாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கரூரில் ஐடி அதிகாரிகளை தடுத்த திமுகவினர்.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நூதன விளக்கம்!