கரூர்: தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள் ஒப்பந்ததாரர் உள்ளிட்டவர்களின் வீடுகள், கல்குவாரி, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையிடுவதற்காக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் மே 25-ஆம் தேதி கரூர் வந்திருந்தனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறையினரை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, நிர்வாகி மகேஸ்வரி தலைமையில் திரண்டிருந்த திமுகவினர் வழிமறித்து தடுத்து, அவர்கள் கொண்டு வந்த பையை திறந்து காட்டக்கூறி சோதனையிட்டு, அடையாள அட்டையை காட்டக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுகவை சேர்ந்த குமார் என்பவர் வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரி தாக்கியதாகக் கூறி மயங்கி விழுந்தார். அவரை திமுகவினர் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து பாதுகாப்பு கேட்டு கரூர் நகர காவல் நிலையம் சென்றனர். அதன் பிறகு சேதமடைந்த காரை அங்கே விட்டுவிட்டு கரூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்றனர். இதையடுத்து மற்ற வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனைக்கு சென்ற இடங்களிலும் கட்சியினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால், அனைத்து வருமான வரித்துறை அலுவலர்களும் எஸ்.பி. அலுவலகம் வந்தனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டுக்கு சோதனைக்கு சென்ற காயத்ரி உள்ளிட்ட 4 அதிகாரிகளும் போலீஸ் பாதுகாப்புடன் கார்களில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு சென்று சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
இதனால் வருமான வரித்துறை சோதனை மாலை வரை நிறுத்தப்பட்டிருந்து. அதன் பின் காட்டுமுன்னூரில் உள்ள தனியார் கிரஷர் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் பாதுகாப்புக்கு கோவையில் இருந்து 100 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) வந்தனர்.
இந்நிலையில் கரூர் துணை மேயர் சரவணன் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் உள்ள நிலையில் கரூர் ராயனூரில் உள்ள துணை மேயர் ப.சரவணன் வீட்டில் சோதனையிட அதிகாரிகள் சென்றனர். நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் கதவை திறக்காததால் வீட்டின் நுழைவாயில் கேட்டில் நோட்டீஸை ஒட்டி சீல் வைத்தனர்.
அப்போது அங்கு திரண்ட அவரின் ஆதரவாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வீட்டுனுள் ஆட்கள் இருக்கும்போது எப்படி சீல் வைக்கலாம் எனக்கேட்டு அதிகாரிகளின் கார் முன்பும், பின்பும் மாடுகளுடன் மாட்டு வண்டிகளை நிறுத்தி தரையில் அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதரவாளர்கள் எதிர்ப்பால் அதிகாரிகளை சீல் அகற்றிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
இதனை அடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையின் போது இடையூறு செய்தவர்கள் மீது வருமான வரித்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் அடிப்படையில் போலீசார் நடவடிக்கையைத் துவங்கினர். ராமகிருஷ்ணபுரத்தில் இடையூறு செய்து வாகனத்தை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத 8 முதல் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், செங்குந்தபுரத்தில் இடையூறு செய்தவர்கள், ஏகேசி காலனியில் இடையூறு செய்த 40க்கும் மேற்பட்டோர் மீது கரூர் நகர போலீசாரும், ராயனூர் கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனைக்கு சென்றபோது, இடையூறு செய்தவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மீது தாந்தோணிமலை போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, ராமகிருஷ்ணபுரம் சம்பவத்தில் குமார் என்பவர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வருமான வரித்துறை ஆய்வாளர் காயத்ரி மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் கரூர் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் 8 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் கைது நடவடிக்கை இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.
இதனிடையே நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவரான கொங்கு மெஸ் மணி உணவகத்தில் நடைபெற்ற சோதனையில் நேற்று இரவு சீல் வைத்து அதிகாரிகள் பூட்டிச் சென்றனர். இன்று காலை மீண்டும் சோதனையை துவங்கி உள்ளனர்.
இதேபோல நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் பிரேம்குமார் மனைவி ஷோபனா என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அலுவலர்கள், டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புடன் இன்று 3வது நாளாக (மே 28ம் தேதி) வருமான வரித்துறை சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தவிர மூன்றாவது நாளாக கணேஷ் முருகன் புளூ மெட்டல் மற்றும் கணேஷ் முருகன் பேருந்து உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இது தவிர கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், சிக்கியுள்ள ஆவணங்கள் அடிப்படையில் மேலும் சிலரின் வீடுகளில் இன்று சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழங்கப்பட்ட புகாரில் திமுகவினர் கைது ஒரு பக்கம், மறுபுறம் வருமானவரித்துறை சோதனை மூன்றாவது நாளாக நீடித்து வருவது உள்ளிட்ட சம்பவங்கள் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'தானா சேர்ந்த கூட்டம்' பட பானியில் மத போதகர் வீட்டில் போலி வருமான வரித்துறையினர்; வேஷம் கலைந்தது எப்படி?