கரூர்:சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, நகரில் அனுமதியை மீறி 100-க்கும் மேற்பட்டோர் இன்று (ஜன.3) இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, ஜவஹர் பஜார் முதல் கோவை சாலை வரை சென்றபோது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் கூச்சலிட்டபடி சென்றனர்.
அத்துமீறி ஊர்வலம்:இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் திடீரென இளைஞர்களைப் பிடித்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது, பெண் உதவி காவல் ஆய்வாளர் பானுமதி, அவ்வழியாக கூச்சலிட்டபடி சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி, இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பெண் எஸ்ஐ-க்கு எலும்பு முறிவு: அப்போது பெண் காவல் உதவி ஆய்வாளர் பானுமதியின் கையைப் பிடித்து முறுக்கி சாவியைப் பிடுங்கிக்கொண்டு அந்த இளைஞர்கள் மீண்டும் கூச்சலிட்டபடி சென்றனர். இதில், பெண் காவல் உதவி ஆய்வாளர் பானுமதிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் சத்தமிடவே, அருகிலிருந்த பிற காவலர்கள் அவரை மீட்டு கரூர் அமராவதி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.