கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான குளம் உள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்துவந்திருக்கின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த ராமர் என்கிற வீரமலை (60), அவரது மகன் நல்லதம்பி (40) ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தொடர்ந்தனர்.இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் வீரமலையை அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் - அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கரூரில் தந்தை-மகன் வெட்டிக் கொலை தொடர்ந்து அவரது மகனை அந்த கும்பல் தேடிக்கொண்டிருந்தபோது, நல்லதம்பி கீழமேடு என்ற இடத்தில் உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் நல்லதம்பியும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இது குறித்து தகவலறிந்த குளித்தலை காவல் துறையினர் இருவேறு இடங்களில் இருந்த உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.