கரூர்: 'ஏழை மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என அரசியல்வாதிகள் நினைக்கும் வரை இந்த மண்ணிலிருந்து ஏழைகளுக்கு விமோட்சனம் கிடையாது' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
கரூர் நகரம் பகுதியில் இன்று தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத்தெரிவித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது அவர், 'இன்னும் 40 ஆண்டுகள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சியில் இருக்கும்' எனத் தெரிவித்தார்.
'தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக பேசுபவர்கள், செயல்படுபவர்கள் மீது காவல்துறையை ஏவி விட்டுப் பொய் வழக்கு போடுகின்ற திமுக அரசு தைரியம் இருந்தால் பாஜக-காரர்கள் மீது கை வைத்துப் பாருங்கள்' என சவால் விடுத்தார்.
'நாம் என்ன பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோமா? 21ஆம் நூற்றாண்டு ஜனநாயக நாட்டில் வாழ்ந்து வருகிறோம். அதனால் தவறு செந்தில்பாலாஜி செய்தாலும் மொத்த திமுகவும் உள்ளே போக வேண்டிய நிலை ஏற்படும்’ என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ’தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்றால், நேர்மையான மக்களின் பக்கமும், நேர்மையான கட்சியின் பக்கமும் நிற்க வேண்டும். அப்போதுதான், ஏழை மக்களின் வாழ்க்கை உயரும். ஏழை மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என அரசியல்வாதிகள் நினைக்கும் வரை இந்த மண்ணிலிருந்து ஏழைகளுக்கு விமோட்சனம் கிடையாது.
தற்போது 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 1,120 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. இனி உயர்த்தப்படும் கட்டணம் ரூ.1,725 ஆக உயரப்போகிறது. மத்திய அரசு எந்த கடிதத்திலும் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி தெரிவிக்கவில்லை. மத்திய அரசு 28 கடிதங்கள் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ளதாக செந்தில்பாலாஜி கூறுகிறார். வடிவேல் நகைச்சுவையில் வருவது போல செந்தில் பாலாஜி பேசி வருகிறார்.
மாநில மின்சார வாரியத்தில் உள்ள கடன்களை சரி செய்வதற்கு வழி ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள் என்றுதான் மத்திய அரசு ஆலோசனை வழங்கி உள்ளது’ என்றார்.
திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் பாஜகவினர் மீது கை வைத்துப் பார்க்கட்டும் - அண்ணாமலை சவால்! தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க:குற்றாலத்தில் கொட்டித்தீர்த்த மழை; திடீர் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!