கரூரில் இன்று தனது மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி முதலமைச்சர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய பாஜக அரசால் 1 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு தீட்டி, தமிழகத்தில் முதல்முறையாக குடிமராமத்து திட்டங்களை மேற்கொண்ட ஒரே அரசு அதிமுக அரசு தான். காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை பெற்று விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் திமுக ஆட்சியின் போது காவிரி நீர் பிரச்சனையே தீர்க்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்து உங்களுடையதாக இருக்காது! வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டப்பன் போலத்தான் செந்தில் பாலாஜி. ஆட்சியை கலைக்க சதி செய்தவர். அரவக்குறிச்சி தொகுதியில் 5 ஆண்டுகளில் 2 சின்னங்களில் போட்டியிட்டவர். அதிமுக ஊழல் செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பக்கத்தில் செந்தில்பாலாஜியை வைத்திருக்கும் அவர் அதை பேசக்கூடாது. எனவே, நல்லவருக்கு வாக்களியுங்கள். நிறம் மாறும் பச்சோந்திக்கு அல்ல.
திமுக என்றாலே அராஜக, ரவுடி, அட்டூழியம் பண்ணும் கட்சி. ஸ்டாலின் நான் முதல்வரானால் எனக்கூறி அதிகாரிகளை மிரட்டுகிறார். அவரது மகன் உதயநிதி டிஜிபியையே மிரட்டுகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் படாத பாடுபடுவார்கள். திமுக ஆட்சி காலத்தில் அபகரிக்கப்பட்ட 14,000 ஏக்கர் நிலங்கள் அதிமுக அரசு மீட்டுக் கொடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்து, உடமை உங்களுடையதாக இருக்காது” என்றார்.
இதையும் படிங்க: கொளத்தூர் களத்தில் கண்ணையா? அடுத்து மகன் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு!