காதல் திருமணம்: வரதட்சணை கேட்ட கணவன் கைது
கரூர்: காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணிடம் வரதட்சனை கேட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் புலியூர் அருகே ஓடமுடியாம் பாளையம் பகுதியில் வசித்துவரும் ஜெகதாம்பாளின் மகன் அன்பழகன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அன்பழகன் 4 வருடங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த பெமினா பேகம் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். ஜூன் 6ஆம் தேதி ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தற்போது அன்பழகன் தன் மனைவியிடம் இரண்டு லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்தால் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெமினா பேகம் கரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சனை கேட்பதாக கணவர் மீது புகாரளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து அன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக அன்பழகனின் தாயார் ஜெகதாம்பாளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.