கரூர் மாவட்டம் அருகேயுள்ள மணவாடி ஐயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் (35), இவரது மனைவி தீபிகா (33). இவர்களுக்கு நான்கு வயதில் அக்ஷயா என்ற மகள் உள்ளார். இவர்கள் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில், ரங்கநாதனும், தீபிகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளியணை காவல் துறையினர் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.