கரூர்:கிறிஸ்துமஸ் பண்டிகையை வருவதையொட்டி, கரூரில் உள்ள சர்வதேச கிதியோன் இன்டர்நேஷனல் என்ற கிறிஸ்தவ அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நீதிபோதனை அடங்கிய புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்காக ஆனந்தராஜ், மங்கலராஜ், மனோகரன், நிர்மலா, பழனியம்மாள் ஆகிய ஐந்து பேர் நேற்று (டிசம்பர் 18) காரில் சென்றுள்ளனர்.
கரூர்-ஈரோடு சாலையில் உள்ள புன்னம்சத்திரம் பகுதியில் நேற்று மாலை சென்றபோது, அங்குவந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி கந்தசாமி மற்றும் சிலர், அவர்கள் சென்ற காரை முற்றுகையிட்டு மதமாற்றம் செய்வதாகக் கூறி தகராறில் ஈடுபட்டதுடன் கார் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.
இந்து முன்னணி நிர்வாகி கைது
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அரவக்குறிச்சி டிஎஸ்பி முத்தமிழ்செல்வன் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் இரு தரப்பையும் விசாரணைக்காக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தநிலையில் இன்று(டிச.19) காலை இந்து முன்னணி நிர்வாகி கந்தசாமி கைது செய்யப்பட்டார்.
கந்தசாமி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணியினர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புகழூர் தவிட்டுப்பாளையம் சாலையில் அமர்ந்து காவல் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.