Highway Employees Union Protest decision making meeting கரூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூர் வெங்கமேட்டில் உள்ள செல்வம் மஹாலில் மாநிலத் தலைவர் வெங்கிடு தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார், மாநிலத் துணைத் தலைவர் மகாவிஷ்ணு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தாமோதரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் விஜயகுமார், மாநில பொதுச்செயலாளர் வைரவன், மாநில பொருளாளர் வி.பி.பரமேஸ்வரன் பங்கேற்று, சாலை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், போராட்ட அறிவிப்பு செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் இரண்டு கட்ட போராட்டங்கள் மேற்கொண்டு, மூன்றாவது கட்ட போராட்டமாக எதிர் வரும் அக்டோபர் 13ஆம் தேதி தமிழக முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வைரவன் ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "சாலை பணியாளர்களின் 20 ஆண்டுக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சாலை பணியாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பணி நீக்கத்துக்கு பிறகு 41 மாதம் கடுமையான போராட்டத்திற்கு பிறகு 84 சாலை பணியாளர்களை பறிகொடுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பணி வழங்க மறுத்தார். அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தமிழகத்தில் ரத்தம் சிந்தும் போராட்டத்தை சாலைப் பணியாளர்கள் மேற்கொண்டனர். 05.02.2006ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பணியை திரும்பி வழங்கினார்.
அதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 22-ல் சாலை பணியாளர்களை பணி நீக்கம் செய்த பணி முறிவு காலத்தை பணிக் காலமாக கருதுவோம் என அப்போதய தமிழக அரசு தெரிவித்தது. 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக அரசாணை 133 இன் படி 41 நாட்கள் அசாதாரண விடுப்பு என கணக்கில் கொண்டு சாலை பணியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியது. அதில் சாலை பணியாளர்கள் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர்.
ஆனால் பென்சன் தொகை பெற முடியாமல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள சாலை பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்க நடவடிக்கை திமுக அரசு மேற்கொள்ளும் என தற்போதைய முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் இன்று வரை தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அது போன்று, 2010ல் அரசு சாலைபணியாளர்களுக்கு அரசாணை 138 படி சாலை பணியாளர்கள் அன் ஸ்கில்டு பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்தது, பின்னர் ஊதிய குழு அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள திமுக அரசு சாலை பணியாளர்களை வஞ்சிக்கும் வகையில் ஒரு பகுதி சாலை ஆய்வாளர்களுக்கு அரசாணை 58 ல் சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் சுமார் 2000க்கும் மேற்பட்ட அன் ஸ்கில்டு( UnSkilled) சாலை பராமரிப்பு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசுக்கு கடிதங்கள் மூலமாக கோரிக்கை வைத்தும் பயனில்லை.
சாலை பராமரிப்பு பணியாளர்கள் தற்பொழுது பாதுகாப்பின்றி சாலை ஓரமாக பணி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. சாலை ஓரமாக பாம்புகள் சீண்டுவதற்கு ஆபத்து நிறைந்து காணப்படுகிறது. மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை வைத்து பணி செய்வதால் அதனால் காயங்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ஊதிய குழுவில் உள்ள பரிந்துரைப்படி ஆபத்து படி 10% சாலை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். சாலை பணியாளர் 6,000 காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை தற்போதுள்ள திமுக அரசு திரும்ப பெற்று சாலை பணியாளர்களுக்கு பணி வழங்கி உள்ளது. கடந்த மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தை நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் இயக்குனர் ஆகியோர் 13.04.2023ம் தேதி மாநிலம் தழுவிய பெருந்திரல் போராட்டத்தை கைவிடக் கோரி பேச்சுவார்த்தைக்கு அழைத்து விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் இன்று வரை அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. கரூரில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளாத போக்கினால் மூன்று கட்ட போராட்டத்தை அறிவிப்பு செய்கிறோம். அதன்படி செப் 8ம் தேதி மாநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் கொட்டும் முரசு போராட்டம், அக்டோபர் 2ம் தேதி இரண்டாம் கட்ட போராட்டமாக சாலை பணியாளர்கள் ரத்தம் சிந்தும் போரட்டம் செய்து உதிரத்தில் கையொப்பமிட்டு அதனை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பும் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.
3வது கட்ட போராட்டமாக அக்டோபர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் முகாமில் சாலை பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தி, ரத்த கையெழுத்து பெறப்பட்ட கோரிக்கை மனுவினை தமிழக முதலமைச்சருக்கு வழங்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவம் போல் கரூரில் தலித் மாணவன், அவரது பாட்டி மீது தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது!