கரூர் பேருந்து நிலையம் முன்பு நகர போக்குவரத்துக் காவல் துறையினர் நூதன முறையில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தனர். கரூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்வில், காவல் துறையினர் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு லட்டு வழங்கி கைகுலுக்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
மேலும் விபத்தில்லா பயணம் மேற்கொள்ள சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்நிகழ்வு அப்பகுதியில் சென்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. கரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார், நகர போக்குவரத்துக் காவல் நிலைய அலுவலர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.