கரூரில் நடைபெற்ற பாஜக என் மண் என் மக்கள் யாத்திரை.. நோயாளியுடன் சிக்கித் தவித்த 108 ஆம்புலன்ஸ்.. கரூர்மாவட்டத்தில் உப்பிடமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பேசத் துவங்கிய சமயத்தில் அவ்வழியாக நோயாளியை ஏற்றிவந்த 108 ஆம்புலன்ஸ், சாலையில் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றது.
அதேபோல நான்குக்கும் மேற்பட்ட தனியார்ப் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் மாணவர்களை வாகனத்துக்குள்ளே அமரவைத்துக் கொண்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து, கூட்டம் முடிந்த பிறகே அங்கிருந்து செல்லக்கூடிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டங்கள் நடைபெறும் போது காவல்துறை உரியப் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல், நோயாளிகளையும், பள்ளி மாணவ மாணவர்களையும் மிகுந்த அவதிக்குள்ளாக்கியது என்பது கரூர் பொதுமக்களிடையே கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாஜக என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியின் போது போக்குவரத்து நெரிசலில் முதல் நாள் யாத்திரை நிகழ்ச்சி திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் இதே போல அவசர ஊர்திகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து இரண்டாவது நாள் யாத்திரை நிகழ்ச்சியிலும் நோயாளியுடன் 108 வாகனம் சாலையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:அடுத்தடுத்த வழக்குகள்..பேருந்தில் தொலைதூரப் பயணம்..!அமர்பிரசாத் ரெட்டியை அலறவிடும் காவல்துறை..பின்னணி என்ன?