கரூர்: தமிழ்நாடு நாடார் பேரவை முப்பெரும் விழா கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் மண்டப கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நாடார் மகாஜன சங்கத் தேர்தலில் பனைமரச் சின்னத்தில் தனது அணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், “தமிழ்நாட்டில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்று. நாடார் பேரவை கடந்த 30 ஆண்டுகளாக மதுவுக்கு பதிலாக பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யும் உரிமை வேண்டும் என போராடி வருகிறது.
கள் குடித்து அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்திருந்தால் அதற்கு 10 கோடி பரிசு வழங்க உள்ளதாக அறிவித்திருந்தோம். இதுவரை அப்படி ஒரு புகார் இதுவரை யாரும் கள் குடித்ததால் இறந்தார்கள் என்று சொல்லவில்லை. கள் என்பது இயற்கை பானம். தமிழ்நாட்டின் அரசு மரமாக பனைமரம் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் 12 கோடி பன மரங்கள் இருந்தன. தற்போது செங்கல் சூளைக்கு மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
மரங்கள் வெட்டப்படுவதால் தான் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படுகிறது. பனை மரங்களை வெட்டக்கூடாது என அரசு கூறினாலும், இதுவரை பனை மரங்களை வெட்டியவர்கள் கைது செய்யப்படவில்லை. அரசு அதிகாரிகளின் மெத்தனமான நடவடிக்கைகளால் பனை மரங்கள் அழிந்து வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கூட மது பாட்டில்களுக்கு பதிலாக பனைமர கள் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் தேர்தல் வரும் போது அரசாங்கங்கள் மாறுகின்றன பனை நல வாரியம் அமைத்து, கள் இறக்கும் உரிமையை பெற்றுத் தருவோம் என்ன கூறுகின்றனர். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதைப் பற்றி அரசியல் கட்சிகள் பேசுவதில்லை. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மரணம் அகற்றப்பட வேண்டும் என்றால் உடலுக்கு எந்த பாதிப்பும் தராத இயற்கை பானமான கள் இறக்கி விற்பனை செய்யும் உரிமையை வழங்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சென்னை, திருத்தணி போன்ற பகுதியில் தமிழகத்தில் இணைந்திருப்பதற்கு மா.பொ.சிவஞானம் தான் முக்கிய காரணம். தமிழ்நாட்டில் மபொசிக்கு சிலை வைக்கப்பட்டிருந்தாலும் மணிமண்டபம் இதுவரை அமைக்கப்படவில்லை. சென்னையில் மணி மண்டபம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.