கரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முக்கியக்காரணம் தேவையில்லாத பொறுப்புகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, டிஎன்பிஎல் தொழிற்சாலையில் உள்ள அலுவலர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
திமுக என்றாலே மின்வெட்டு:ஐஏஎஸ் அலுவலர் பொறுப்பில் உள்ள ஒருவரை தனி அலுவலராக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்திற்கு நியமிக்க வேண்டும். புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் ஏற்று பணியமர்த்த வேண்டும்.
நீண்டகாலமாக நிரந்தரப்படுத்தப்படாத பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக மே தின பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடங்கிவிட்டது. கடந்த காலத்தைப் போல தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்ற திமுக அரசு செயல்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு தான் என்று எல்லாத் தரப்பு மக்களும் பேசி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் மின்வெட்டு குறித்து கூற தமிழ்நாட்டிற்கு எதற்கு மின்சாரத்துறை அமைச்சர்..?, தமிழ்நாடு மின்வெட்டு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் பேசவேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு குறித்து சமாளிக்கும் வகையில் பேட்டி அளிப்பதை விட்டுவிட்டு, செயலில் காட்டவேண்டும்” எனப் பேசினார்.
அனைத்திலும் அரசியல் செய்கின்றனர்: மேலும், தமிழ்நாட்டில் மின்வெட்டு தற்போது இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சென்னையில் உள்ள தனது வீட்டில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் மக்கள் பிரச்னையை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, மக்கள் பிரச்னைக்குத்தீர்வு காண வேண்டும். ஆளுநர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரப்போட்டி தான் நிலவுகிறது. மாணவர்கள் பிரச்சனையாகட்டும்; இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகட்டும் அனைத்திலும் அரசியல் செய்து வருகின்றனர்.