கரூர்: கரூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து கோவை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என பயணிகளிடம் கூறியதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக பயணிகளை ஏற்றுக்கொண்டு கோவையை நோக்கி அரசு பேருந்து ஒன்று க.பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயணிகளுக்கு ஆதரவாக, அரசு பேருந்தை சிறைபிடித்து நேற்று இரவு 7 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த க.பரமத்தி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த திராவிட கழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகி வடிவேல் ராமசாமி ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “கரூர் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் அரசு பேருந்துகள் திருப்பூர் கோவை செல்வதற்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்ற வீதம் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
ஆனால் கரூருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முதல் பேருந்து நிறுத்தம் க.பரமத்தி பேருந்து நிறுத்தம் ஆகும். சுமார் 50க்கும் மேற்பட்ட முக்கிய கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர். கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு பிறகும், முன்பும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் பேருந்து நிறுத்தமாக இருந்தது.