GOLD JEWELLERY STOLEN: கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட தொழில்பேட்டை ஆசிரியர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கருணாநிதி(55). இவர் தனியார் நிறுவன மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் இளைய மகள் ஜனனி ஆகியோர் டிசம்பர் 27ஆம் தேதி காலை 10 மணி அளவில், தனது மூத்தமகள் ஹரிணியை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து வர சென்றுள்ளனர்.
பின்னர் மதியம் 2 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்த பொழுது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த கஜானா பெட்டி உடைக்கப்பட்டு, அதனுள் வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து இதுகுறித்து கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். தகவலறிந்து விரைந்த காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ரொக்கப் பணம் 4 லட்சத்து 6ஆயிரம் மற்றும் தங்கச் செயின், நெக்லஸ், மோதிரம், தங்க காயின் 26 சவரன் தங்க நகைகள் திருடு போய் இருப்பதைக் காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தடயவியல் நிபுணர்களைக் கொண்டு கைரேகைகளை சேகரித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டுக்குள் திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம், ஆசிரியர் காலனி குடியிருப்புவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு